நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை பார் கவுன்சில் நிறைவேற்றியுள்ளது.
இந்தியாவில் கடந்த வாரம் அனைத்து மாநில பார் கவுன்சில்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வயதை உயர்த்துவது தொடர்பாக அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62-ல் இருந்து 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வயது 67 ஆகவும் உயர்த்தப்படும். இந்த தீர்மானத்தின்படி உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக தீர்மானத்தின் நகலை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது. மேலும் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை பல்வேறு கமிஷன்கள் மற்றும் அமைப்புகளின் தலைவராக நியமிப்பது தொடர்பான சட்ட திருத்தத்தையும் கொண்டு வருவதற்கான பரிசீலனையும் நடைபெற்று வருகிறது.