ஈரோட்டில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “தமிழகம் முழுவதும் நேற்று நண்பகல் 12 மணிவரை 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் 56 சதவீதமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலுந்து தற்போது வரை நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் மாணவர்களிடம் தற்கொலையானது ஒரு முடிவல்ல, மாணவர்கள் தைரியமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றுஅறிவுறுத்தி வருகிறார்.
நீட் தேர்வு குறித்து சட்டமுன்வடிவு ஒன்று சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்படிவமானது ஜனாதிபதியிடம் சென்ற பிறகு அவரின் ஒப்புதல் பெறுவதற்காக நமது முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுவார். அதற்குள் மாணவர்கள் யாரும் அவசரப்பட்டு தற்கொலை முடிவை மேற்கொள்ள கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
நீட் தேர்வு எழுதுபவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மனநல ஆலோசகரை கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் அனைத்து மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.