தமிழகத்தில் நீட்தேர்வு அச்சம் காரணமாக பல மாணவர்கள் உயிரிழந்து வருவதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அந்த மாணவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பாண்டு நீட் தேர்வு எழுதி இந்த முறையும் தம்மால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்று அஞ்சியுள்ளார். அந்த அச்சம் காரணமாக நீட் தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு ஒருநாள் முன்னதாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். எனவே நீட்தேர்வு தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நீட்தேர்வு மருத்துவ கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவும்,மருத்துவக் கல்வி வணிக மையமாக படுவதை தடுக்கவும் கொண்டு வரப்பட்டது என கூறப்பட்டாலும் அதை நிறைவேற்றவில்லை என கூறியுள்ளார். எனவே நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.