Categories
மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வு…. மீண்டும் ஒரு தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…. பெரும் சோகம்…..!!!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவம் படிக்க சீட் கிடைக்காத விரக்தியில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த புழல், கண்ணப்ப சாமி நகர், யாக்கோப் லாக் 27வது தெருவை சேர்ந்த ஆனந்தன் துபாயில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிகளின் மூத்த மகன் சுஜித். இவர் தனியார் பள்ளியில் கடந்த 2019ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக 2019ஆம் ஆண்டு நீட் நுழைவு தேர்வு எழுதினார். அதில் தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் 527 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இதையடுத்து மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்து கலந்தாய்வை எதிர்பார்த்து காத்திருந்தார்.

இதற்கிடையில் துபாயிலிருந்து விடுப்பில் வந்த ஆனந்தன் தனது மகன் சுஜித்தை மருத்துவராக வேண்டும் என்பதற்காக பல்வேறு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சென்று வந்தார். ஆனாலும் சீட் கிடைக்கவில்லை. மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுஜித் நேற்று மதியம் தாய் விஜயலட்சுமி அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது தனது படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  கடைக்குச் சென்று வீடு திரும்பிய தாய் இதை பார்த்து கத்தி கூச்சலிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதாவது உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுஜித்தின் செல்போனை பறிமுதல் செய்து அதனை ஆய்வு செய்யவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |