பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. நாடு முழுவதும் 10 லட்சம் மாணவியருக்கு உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் தேர்வின் போது பெண் அலுவலர்கள் என்ன செய்தனர் என்பதை மாணவி ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார். அதில், “இரும்பு கொக்கிகள் கொண்ட உள்ளாடை அணிந்திருந்ததால், உள்ளாடைகளை கழற்ற சொல்லி ஒரு பெட்டியில் போட்டனர். தேர்வறைகளுக்குள், ஆண்கள் இருந்ததால், உள்ளாடையின்றி செல்ல அசவுகரியமாக இருந்தது. நாங்கள் 17 பேர் சரியாகவே தேர்வு எழுதவில்லை. தேர்வு முடிந்த பின்பு, அருகில் இருந்த ஒரு இருட்டு அறையில் சென்று அணிந்து கொண்டோம்” என்றார்.