எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜனநாயகத்தைப் பற்றி பாடம் நடத்துவது கேலிக்கூத்து என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் சொல்கிறார்… உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்று புலம்புகிறார். உள்ளாட்சித் தேர்தல் அதிமுக ஆட்சி காலத்தில் எந்த அளவு நடந்தது. 2001இல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேயராக இருந்தபோது என்னென்ன அராஜகம் எல்லாம் செய்தார்கள். அவரை வர விட கூடாது என தடுக்க முயன்றது.
2011 தேர்தலில் இருந்த அத்தனைபேரையும் வெளியேற்றிவிட்டு அதிமுக அறிவிக்கவில்லையா ? நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரவு ஒரு மணி, இரண்டு மணி என்று அந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தேர்தல் ஆணையரிடம் போய் முற்றுகையிட்டு போராட்டம் செய்யவில்லை என்றால் பல்வேறு முடிவுகளை மாற்றுவதற்கு அன்றைக்கு தேர்தல் ஆணையதை தன்னுடைய கைப்பாவையாக வைத்துக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு முயற்சிக்க வில்லையா ? அதையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா ?
ஜனநாயகத்தைப் பற்றி அவர் இன்றைக்கு பாடம் நடத்துவது கேலிக்கூத்து.சட்டப்பேரவைத் தலைவராக இருக்க கூடிய ராதாபுரம் தொகுதி அப்பாவுவின் தேர்தல் முடிவு என்ன ஆயிற்று ? அப்பாவு வென்ற தொகுதியை அவர் தோற்றதாக அறிவித்து அன்றைக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரை வரவைத்து அன்று ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்த ஒரு கட்சி. அந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் இன்றைக்கு பாடம் நடத்துகிறார் என்று சொன்னால் சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது.