முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீண்டும் மாணவர்களுக்காக களமிறங்கியுள்ளார். இதனால் கல்லூரி மாணவர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “நோய் தொற்று காரணமாக சுமார் 20 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ளதால் மாநில அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி கல்லூரிகளை திறந்து மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
கல்லூரி திறந்து இரண்டு மாதங்கள் ஆனாலும் முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. பண்டிகை காலம், பருவமழை என கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இந்த செமஸ்டர் உரிய பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடிக்கவில்லை. தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப் படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு மாணவர்களுக்கு நேரடி தேர்வுகளை வைக்க வேண்டும் என்று கூறியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மூன்று நாட்களாக மாணவர்கள் தொடர்ந்து வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றன.
எனவே நடைபெற உள்ள இந்த ஒரு செமஸ்டர் தேர்வு மட்டும் நேரடி தேர்வாக இல்லாமல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த வேண்டும். மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.