திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று நாங்கள் நம்புவதை விட உங்களிடம் அதிக நம்பிக்கை இருப்பதை நான் பார்க்கிறேன் என ஸ்டாலின் மக்களிடம் பேசினார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முக.ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தை உங்களுக்கு தெரியும். கடந்த பத்து வருடமாக நாம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருப்பது யார் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுக ஆட்சி ஏற்கனவே ஜெயலலிதாவின் தலைமையில் தான் இந்த ஆட்சி இருக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து தேர்ந்தெடுத்தனர். ஆனால் அம்மா ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைந்துவிட்ட காரணத்தினால் விபத்து போன்று எடப்பாடி முதலமைச்சர் ஆகியுள்ளார்.
அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. அவரை முதலமைச்சர் என்று நினைத்து நீங்கள் ஓட்டு போடவில்லை. ஜெயலலிதாவை நினைத்து ஓட்டு போட்டீர்கள். அது தான் தமிழகத்தில் நடந்தது. அவர் எப்படி முதலமைச்சர் ஆனார் என்று அனைவருக்கும் தெரியும். சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது கூட சந்தேகம்தான். மண் புழு மாதிரி ஊர்ந்து சென்று சசிகலாவின் காலில் விழுந்து, அவர் முதலமைச்சர் ஆன கதை சமூகவலைதளத்தில் பரவியது. ஆனால் அந்த பிரச்சனை எனக்கு தேவையில்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி மக்கள் பற்றி கவலைப்படாமல் பல கொடுமைகளை செய்து கொண்டிருக்கின்றது. விரைவில் நாம் தேர்தலை சந்திக்கப் போகிறோம். இடையில் நான்கு மாதங்களே உள்ளது. இந்த தேர்தலில் நாம் அனைவரும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் நீங்கள் அனைவரும் இங்கு வந்து திரண்டு வந்து இருக்கிறீர்கள். இன்னும் கூற வேண்டுமென்றால் நம்பிக்கையுடன் வந்துள்ளீர்கள். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால் ஆட்சி மாறப்போகின்றது. திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று நாங்கள் நம்புவதை விட உங்களிடம் அதிக நம்பிக்கை இருப்பதை நான் பார்க்கிறேன்.