டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மஹாராஜ் பேட்டிங் தேர்வு செய்ததற்கு ஷிகர் தவான் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னாய் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
அதேபோல தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் தப்ராஸ் ஷம்ஸி ஆகிய இருவருக்கு பதிலாக ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் பார்ச்சூன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். எனவே கேசவ் மஹாராஜ் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 278 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஹென்றிக்ஸ் 76 பந்துகளில் 74 ரன்களும், மார்க்ரம் 89 பந்துகளில் 79 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இந்திய அணி ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி சதம் மற்றும் இஷான் கிஷனின் சிறப்பான ஆட்டத்தால் 45.5 ஓவரில் 3 விக்கெட் இழந்து 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில் (15 பவுண்டரி) 113* ரன்களும், இஷான் கிஷன் 84 பந்துகளில் (7 பவுண்டரி, 4 சிக்சர்) 93 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இதையடுத்து போட்டி முடிந்த பின் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் பேசியதாவது, டாஸ் எங்களுக்கு நன்றாக வேலை செய்தது, டாஸ் வென்று கேசவ் பேட்டிங் தேர்வு செய்ததற்கு நன்றி (புன்னகைத்தார்). சரியான நேரத்தில் பனி வந்ததில் மகிழ்ச்சி, என்று கூறிய தவான் தொகுப்பாளர் முரளி கார்த்திக்குடன் சேர்ந்து சிரித்தார்.
மேலும் இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார்கள், அந்த பார்ட்னர்ஷிப் பார்க்க மிகவும் நன்றாக இருந்தது. அது நன்றாக வந்து கொண்டிருந்தது, அவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப் பார்க்கவே உற்சாகமாக இருந்தது என்று கூறினார்.
அதேபோல ஒரு கட்டத்தில் 300 ரன்களை மிக எளிதாகத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவின் ரன் ஓட்டத்தைத் தடுத்த பந்துவீச்சை தவான் பாராட்டினார். “பந்துவீச்சு பிரிவில் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர், அவர்கள் அனைவரும் இளமையாக உள்ளனர், இது அவர்களுக்கு நல்ல கற்றல். குறிப்பாக ஷாபாஸ். அனைத்து இளம் வீரர்களும், முதிர்ச்சியைக் காட்டியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்று தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் கேசவ் மஹாராஜ் கூறியதாவது, மாலையில் பனிப்பொழிவை தாங்கள் எதிர்பார்க்கவில்லை, எனவே முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தோம். “பனி இந்த ஆடுகளத்தில் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எங்களால் முடிந்ததை முயற்சித்தோம், ஆனால் ஸ்ரேயாஸ் மற்றும் கிஷன் நன்றாக விளையாடினர்.
“போட்டியில் போக போக ஆடுகள பாதை மெதுவாகவும், குறைவாகவும் இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் மென்மையான பந்து மற்றும் பனி காரணமாக 30 வது ஓவருக்குப் பிறகு பேட்டிங் செய்வது எளிதாகிவிட்டது என்று தெரிவித்தார்..