Categories
தேசிய செய்திகள்

நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்…. குஜராத் பால விபத்தில் புதிய திருப்பம்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்….!!!!

பால விபத்து குறித்து உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

குராஜத் மாநிலத்தில் உள்ள மோர்பி  பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம்  கடந்த மாதம் 30-ஆம் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆற்றில் விழுந்து 135 பேர் உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இதனையடுத்து குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் இந்த விபத்து குறித்து பதில் அளிக்குமாறு மாநில அரசு, மாநில உள்துறை அமைச்சகம், மோர்பி   நகராட்சி, நகர்ப்புற வளர்ச்சி குழுமம், மாநில மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து மோர்பி நகராட்சி சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தொங்கு பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும், அதனை சரி செய்யும் வகையில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கான வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு அந்த பாலத்தை பராமரித்து வரும் அஜந்தா நிறுவனம் சார்பில் நகராட்சிக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு தகவல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாலத்தை 15 ஆண்டுகளுக்கு முழுமையாக பராமரித்து நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் அஜந்தா நிறுவனத்துக்கும்,நகராட்சி தலைமை அதிகாரிக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 8-ஆம்  தேதி முதல் அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி வரை பாலம் பொதுமக்கள் அனுமதிக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் நகராட்சியின்  அனுமதி பெறாமல் கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அந்த  நிறுவனம் திறந்து விட்டது என அந்த மனுவில்  கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஒப்புதல் அளிக்கப்படாத நிலையிலும், பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து பதில் மனுவில் மோர்பி நகராட்சி தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும் அடுத்த விசாரணையின் போது  நகராட்சி பொறுப்பு அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |