கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் கிறிஸ்துமஸை முன்னிட்டு வீட்டில் சிலர் பிரார்த்தனை நடத்தியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அவர்களை மிரட்டிய பஜ்ரங்க் தளத்தைச் சேர்ந்த ஆண்களை பெண்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல ஊர்களில் கிறிஸ்துவ வழிபாடு நடக்கும் இடங்களில் இதுபோன்று அத்துமீறி நுழைந்து அதை தடுக்க முயற்சி செய்வதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் உள்ளன.
இந்த நிலையில் தும்கூரில் ஒரு தலித் வீட்டுக்குள் புகுந்த பஜ்ரங் தளத்தினர், அங்கு பிரார்த்தனை நடத்துபவர்களை தடுக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அங்குள்ள பெண்கள் பஜ்ரங் தளத்தினரை பார்த்து சரமாரியாக கேள்வி கேட்டதால் அவர்கள் திணறிப் போய் விட்டனர். இதையடுத்து தும்கூரில் உள்ள ராமச்சந்திரா என்ற தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் அடிக்கடி கிறிஸ்துவ பிரார்த்தனைகள் நடப்பது வழக்கம். இதேபோன்று கிறிஸ்மஸ் தினத்தன்று ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த தகவல் அறிந்த பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சில ஆண்கள் அங்கு திரண்டு வந்துள்ளனர். மேலும் வீடுகளுக்குள் புகுந்து ஏன் இந்த பிரார்த்தனை நடத்துகிறீர்கள் என்று தகராறு செய்துள்ளனர். அத்துமீறி நுழைந்தவர்களை அங்குள்ள பெண்கள் சரமாரியாக கேள்வி கேட்டதும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தபோதிலும் நீங்கள் இந்து பெண்கள். இந்த பழக்கத்தை மட்டுமே கடைபிடிக்க வேண்டும். இதுபோன்ற பிரார்த்தனைகளை நடத்தக்கூடாது என்று மிரட்டியுள்ளனர் . இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியதால் நிலைமை மோசமடைந்தது. இந்த நிலையில் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பஜ்ரங் தளத்தினரை கலைந்து போகச் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.