நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் உதவி செய்வதற்கு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் நிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை காக்க 5 வெள்ள மீட்புக் குழுவினர் மற்றும் நீச்சல் குழுவினர் தயாராக உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக INS ஜோதி கப்பல் நிறுத்தப்படும் என்று கூறி உள்ளது. இதனைத்தொடர்ந்து நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் உதவி செய்வதற்கு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு 12 பேரிடர் மீட்புக் குழுக்கள் இரண்டு பொறியாளர் குழுக்கள் தயாராக உள்ளதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளது. மேலும் புயல் பாதிப்பின் போது தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதால் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து மாநில மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட இருந்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.