இன்னும் ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘நிவர்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாக உதவிக்கு அழைக்க காவல்துறை உதவி எண்களை வெளியிட்டுள்ளது. 9498186868, 9444322210, 9962532321 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு போக்குவரத்து நெரிசல் தொடர்பான உதவிகளைக் கோரலாம் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரியில் முதல் கட்டமாக 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் திறக்கப்படும் நீரின் அளவானது 3,000 கனஅடியாக அதிகரித்திருந்தது. மாலை 6 மணி முதல் மேலும் கூடுதலாக 2 ஆயிரம் கனஅடி நீர் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து என்பது 6,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால், இதனால் அடையாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால், அடையாறு கரையோரப் பகுதிகளான ராமாபுரம், எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.அடையாறு கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் முடிச்சூர் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.