கோவா மாநிலத்தில் நிலையான ஆட்சியை அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை விரட்ட போராடுவோம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பாரதிய ஜனதா காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டனர். தற்போது நான்கு நாட்கள் பயணமாக கோவா சென்றுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக நேற்று கோவா மாநில பார்வேர்ட் கட்சியின் தலைவர் விஜய் ஸர்தோஸியை மம்தா பானெர்ஜி நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் மொகுசா சந்தையில் விற்பனையாளர்களிடம் பேசிய மம்தா, கோவா மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்றார். முன்னதாக இந்த நிகழ்வின்போது பிரபல பாடகர் பியான்ரஸ் பிரான்சிஸ் டுடி மம்தா பானெர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் பாரதிய ஜனதா அரசை விமர்சித்து பல்வேறு பாடல்களை எழுதியது குறிப்பிடத்தக்கது.