மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்வர்ட் ஜிஜோ என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் அரசு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய நண்பர் சுபினும், எட்வர்ட் ஜிஜோவும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வெள்ளையம்பலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இவர்கள் செல்லும் வழியில் மேலமங்கலம் பகுதியை சேர்ந்த சுவாமி தாஸ் என்பவர் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுபின் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் சுவாமிதாஸின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் எட்வின் ஜிஜோ, சுபின் மற்றும் சுவாமிதாஸ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி எட்வர்ட் ஜிஜோ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த சுபின் மற்றும் சுவாமிதாஸ் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். இது தொடர்பாக புதுக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.