ஆட்டோ திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள அப்பாவு பிள்ளை தெருவில் அப்பாஸ் மந்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவாரான இவர் சம்பவத்தன்று சவாரிக்காக கூடலூருக்கு சென்று விட்டு மீண்டும் கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது கூடலூர் துர்க்கையம்மன் கோவில் அருகே சென்றபோது ஆட்டோ திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் அப்பாஸ் மந்திரி படுகாயமடைந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் ஆட்டோ டிரைவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.