பெரம்பலூரில் நிலுவையில் இருந்த 156 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட தலைமை நீதிபதி சுபாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் குடும்ப நல கோர்ட்டு நீதிபதி தனசேகரன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், சார்பு நீதிபதி ஷகிலா, குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகள் செந்தில் ராஜா, கருப்பசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் நீண்ட காலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கோர்ட்டுகளிலும் நிலுவையில் உள்ள ஜீவனாம்சம், சிவில், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் வாகன விபத்து வழக்குகள் உட்பட 700 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 156 வழக்குகளுக்கு ரூ. 3 கோடியே 79 லட்சத்து 89 ஆயிரத்து 753 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. இதில் 337 பயனாளிகள் இதன் மூலம் பயன்பெற்றனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.