கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியில் கந்தசாமி (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசித்து வரும் மாரப்பன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா ஆகியோருக்கும் கந்தசாமிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்த நிலம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மாரப்பன் விவசாயம் செய்து வந்த 4 1/2 ஏக்கர் நிலத்தை நீதிபதி உத்தரவின்படி அரசு எடுத்துக் கொண்டது.
இதனால் ஆத்திரமடைந்த மாரப்பன் மற்றும் சரோஜா ஆகிய 2 பேரும் சேர்ந்து கந்தசாமியை தோட்டத்தில் வைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாரப்பன் மற்றும் சரோஜா ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கந்தசாமியை கொலை செய்த குற்றத்திற்காக கணவன்-மனைவி 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு, தலா ரூபாய் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.