Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“நா என்ன கிழவன் ஆகி விட்டேனா”…. காட்டமாக பதிலளித்த பாபர்….. அப்படி என்ன கேட்டார்?

செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சிரித்துக்கொண்டே காட்டமாக பதிலத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.. 

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20, அதுபோக ஐபிஎல் போன்ற பிரிமியர் லீக் டி20 தொடரிலும் வீரர்கள் விளையாடி வருவதால் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பணி சுமைக்கு ஆளாகி சுமாராகவே செயல்பட்டு வருகின்றனர்.. எடுத்துக்காட்டாக நாம் விராட் கோலியையே கூறலாம்.. விராட் கோலி பணிச்சுமை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.. ஒரு கட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகிய நிலையில், சமீபத்தில் நடந்த தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் அடிக்கடி ஓய்வெடுத்து வந்தார்.

ஆனாலும் அதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக சில வீரர்கள் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விடுகிறார்கள். உதாரணமாக கடந்த ஜனவரியில் கூட தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டீ காக் டெஸ்ட் போட்டியில் இருந்து இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.. அதனைத் தொடர்ந்து ஃபார்ம் அவுட் மற்றும் காயம் காரணமாக 35 வயதிலேயே ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் இங்கிலாந்தின் இயான் மோர்கன்.. இதையடுத்து அதற்கு அடுத்த வாரமே ஆல்ரவுண்டர் பென்ஸ் ஸ்டோக்ஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன் நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து விலகி தான் விரும்பும் போட்டியில் மட்டும் விளையாடும் முடிவை எடுத்திருக்கிறார்.. குடும்பத்திற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

இதன் காரணமாகவே வருகின்ற காலங்களில் இதே போல் உலகில் அனைத்து நாடுகளை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட ஏதாவது ஒரு வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார்கள் என்று பிரபல கிரிக்கெட் தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் பாகிஸ்தான் அணி வரும் ஆகஸ்ட் 16 முதல் மூன்று ஒருநாள் போட்டியில் கொண்ட தொடரில் பங்கேற்க நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதையடுத்து ஐக்கிய அரபு நாடுகளில் ஆகஸ்ட் 27 இல் தொடங்கும் ஆசிக் கோப்பையில் பாகிஸ்தான் அணி களம் இறங்க இருக்கிறது.

இந்த பயணத்திற்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இடம் செய்தியாளர் ஒருவர், இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில்  கடைசி போட்டியில் வெற்றி கையில் இருந்த நிலையில், கோட்டை விடுவதற்கு இதுபோன்ற பணிச்சுமை தான் காரணமா? என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

அந்த செய்தியாளர் கேட்ட கேள்வி : நீங்கள், முகமது ரிஸ்வான், ஷாகின் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பெருமையாக இருக்கிறீர்கள்.. இருப்பினும் இலங்கைக்கு எதிராக 2ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்றதற்கு பனிச்சுமை மற்றும் மன அழுத்தம் வீரர்களை பாதித்தது என்று நீங்கள் கருதுகிறீர்களா? எனவே 2 வகையான கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடுவது சரியான முடிவாக இருக்குமா என்று கேட்டார்.

அதற்கு பாபர் அசாம் பதில் கூறியதாவது : அது உங்களுடைய உடற்தகுதியைப் பொறுத்தது. ஆனாலும் எங்களது  உடல் தகுதிக்கு ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டை குறைத்துக் கொள்ள அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். நான் 2 வடிவங்களைப் பற்றி யோசிக்கவில்லை. உங்களுக்கு நான் கிழவனாகி விட்டேன் என்று தோன்றுகிறதா? அல்லது நான் கிழவனாகி விட்டேனா என்று பதில் அளித்தார்.

அதற்கு செய்தியாளர் பணிசுமை முன்பு இருந்ததை விட அதிகமாக இருக்கிறது அல்லவா என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.. அதற்கு பாபர் அசாம், நான் அப்படி நினைக்கவில்லை.. ஒருவேளை பணிச்சுமை அதியமானாலும் கூட அதற்காக நாங்கள் எங்களது உடல் தகுதியை மேலும் அதிகரித்து அதனை ஈடு செய்வோம் என்று தெரிவித்தார்.
மேலும் சாதனை படைப்பதற்காக நாங்கள் களமிறங்கவில்லை.. பாகிஸ்தானுக்காக போட்டியை வென்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்து போட்டிகளிலும் ஆடுகிறோம் என்று கூறினார்.

அவரது இந்த பதில் சிரிப்பை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாபர் அசாம் மூன்று வகையான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு விராட் கோலி, ஜோ ரூட் போன்ற நட்சத்திர வீரர்களை தாண்டி அதிக ரன்களை வருகிறார். இந்திய வீரர் விராட் கோலியையே பின்னுக்கு தள்ளி ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்ந்துவரும் பாபர் அசாம் 3 வகையான ஐசிசி டாப் 10 பேட்ஸ்மேன்னுக்கான தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே நபராக சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |