பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதிகளை நால்கே என்னும் பயங்கர புயல் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் வருடந்தோறும் குறைந்தபட்சம் 20 புயல்கள் மற்றும் சூறாவளிகள் ஏற்பட்டு நாட்டை புரட்டி போடுகின்றன. இதில் பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழப்பதோடு வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பண்ணைகளும் சேதமடைந்திருக்கின்றன. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பமடைந்து அந்நாட்டை அதிகமான புயல்கள் தாக்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தெற்கு பகுதியில் இருக்கும் மாகாணங்களில் நால்கே உருவான புயல் பல மாகாணங்களை மொத்தமாக புரட்டிப் போட்டது. ஒரு மணி நேரத்திற்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியதில் மின்கம்பங்கள் சரிந்ததோடு மரங்களும் சாய்ந்து விட்டன. அதற்கு பிறகு, பலமான காற்றுடன் மழையும் கொட்டி தீர்த்துள்ளது.
இதனால், மகுயிண்டனாவ் மாகாணத்தில் இருக்கும் பல நகர்களில் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகள் நூற்றுக்கணக்கில் வெள்ளத்தில் மூழ்கி போனது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் கடும் நிலச்சரிவு உண்டானது.
இதில் அதிகப்படியான குடியிருப்புகள் மண்ணுக்குள் போனது. புயல் வெள்ளம் போன்றவற்றில் சிக்கி 31 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் காணாமல் போனதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மாட்டிக்கொண்ட மக்களை மீட்க ராணுவம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. தற்போது வரை, ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.