நாயின் கழுத்தில் சிக்கியிருந்த உடைந்த பிளாஸ்டிக் குடத்தை வெளிநாட்டுப் பெண் ஒருவர் லாவகமாக எடுத்த காட்சி பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி டு பாளையங்கோட்டை சாலையில் மில்லர்புரம் பகுதியில் ரோட்டின் ஓரமாக ஒரு நாய் நின்றுகொண்டு இருந்தது. அந்த நாயின் கழுத்தில் உடைந்த பிளாஸ்டிக் குடத்தின் வாய் பகுதி மாலை போன்று மாட்டிக் கொண்டுள்ளது. இதனால் அந்த நாய் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ரோட்டை கடந்து சென்ற பலரும் இதனை வேடிக்கை பார்த்தபடியே சென்றுள்ளார்கள். அதேசமயம் அந்த சாலையில் ஆஸ்திரேலியா நாட்டில் வசித்த அன்கா என்ற இளம்பெண் வந்துள்ளார். அவர் அந்த நாய் சிரமப்படுவதை பார்த்து மனம் இறங்கியுள்ளார். உடனே அருகே உள்ள கடையில் அன்கா பிஸ்கட் வாங்கி உள்ளார். அந்த பிஸ்கட்டை ஒவ்வொன்றாக நாய்க்கு கொடுத்துள்ளார்.
இதனால் அந்த நாய் அன்காவிடம் பழக தொடங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஒரு சிறிய கயிறால் நாயைப் பிடித்துக் கொண்டு அதன் கழுத்தில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் குடத்தை அகற்ற முயன்றுள்ளார். ஆனால் நாய் ஆக்ரோசமாக அன்காவை பார்த்து உறுமி உள்ளது. ஆனாலும் அவர் முயற்சியைக் கைவிடாமல் மீண்டும் அந்த நாய்க்கு பிஸ்கட் கொடுத்துள்ளார். அதன்பின் சாந்தமான நாயின் கழுத்தில் கிடந்த பிளாஸ்டிக் லாவகமாக அன்கா எடுத்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அன்காவின் மனிதாபிமானத்தை பாராட்டி சென்றார்கள்.