நான் எப்படி புதுச்சேரியில் தவித்தேனோ அதேபோன்று தான் தமிழ்நாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் தவிக்கிறார் என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.
திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இந்திய அரசின் கவனக்குறைவு, அலட்சியத்தின் காரணமாக இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இச்செயலுக்கு பிரதமர் மோடியின் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். இதனிடையில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வந்துள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் படிப்பைத் தொடர மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இதையடுத்து தமிழக முதல்வரும் , பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி உக்ரைனில் இருந்து மாணவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருக்கிறார். இதுபோன்ற நிலை நீட் தேர்வை மோடி அரசு கொண்டு வந்ததால்தான் ஏற்படுகிறது. நடுத்தர மக்களின் மாணவர்களுக்கு மருத்துவ கனவு பலிக்காமல் போனதற்கு காரணம் என்னவென்றால் மோடி அரசுதான். தற்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.
கூட்டணி தர்மத்தை காக்க வேண்டும் என்ற முறையில் ஸ்டாலின் செய்த செயலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் மோடியால், பாஜகவினரால் நான் எப்படி கஷ்டப்பட்டேனோ, அப்படித்தான் ஆளுநர் , மோடி, தமிழக பாஜக தலைவர்கள் தலையீட்டால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தவித்து வருகிறார். இதற்கெல்லாம் விடிவுகாலம் சீக்கிரம் வரும். தற்போது மோடி அரசுக்கு எதிராகவே தமிழகம் திரண்டுள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசை எதிர்த்து பல போராட்டம் மேற்கொண்டு வருவது ஒரு நல்ல முன்னுதாரணம் ஆகும். இது பாராளுமன்றத் தேர்தலுக்கு மிகப் பெரிய ஆயுதமாக இருக்கும் என்று பேசினார்.