நடிகர் சௌந்தரராஜா கடந்த 2012-ம் ஆண்டு மாதவன், ஆர்யா நடிப்பில் வெளியாகிய வேட்டை படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து இவர் சுந்தரபாண்டியன், தெறி, பிகில் ஆகிய பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த வருடத்திற்கான சிறந்த மனித நேய விருது வழங்கப்பட்டது. தமிழகம் முழுதும் கடந்த 5 வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துக் கூறி பொது வாழ்க்கையிலும் ஈடுப்படுத்தி கொண்டதைத் தொடர்ந்து இந்த வருடத்துக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் (துணை போலீஸ் இயக்குனர் – மலேசியா ராயல் போலீஸ்) மற்றும் கலாம் பவுண்டேஷன் சலீம், ஸ்ரீமதி கேசவன், டேக்கேர் இன்டர்நேஷனல் நிறுவனர் முகமது இப்ராஹிம் போன்றோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர். பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சௌந்தரராஜா “நான் செய்வது சேவையல்ல கடமை. மாதம் ஒருநாள் (அல்லது) இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும், இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம் என கேட்டுக்கொண்டு இந்த விருதை விவசாயிகளுக்கும் இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிப்பு செய்கிறேன்” என பேசினார்.