உயர் மின்கோபுரத்தின் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செல்லும் வழியில் உயர் மின் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் விவசாயி ஒருவர் வேகமாக ஏறி கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை கீழே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஜெகநாதன் காளியண்ணன் புதூரில் இருக்கும் கோவிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவர் ஜெகநாதனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெகநாதன் மின்கம்பத்தின் மீது தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அறிவுரை கூறி விவசாயியை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.