நான் அவனில்லை என்ற சினிமா படம் போல் இளம் பெண்களை பார்த்து குறிவைத்து நகை பணம் போன்றவற்றை மோசடி செய்த இன்ஜினியரிங் பட்டதாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையிலுள்ள ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் என்ற ஊரை சேர்ந்தவர் ராகேஷ் ஷர்மா வயது 36. என்ஜினியரிங் படித்த இவர் கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். பிறகு அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 லட்சம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை வாங்கி உள்ளார். அதன்பின் ராகேஷின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அந்த இளம்பெண் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையில் ராகேஷ் ஷர்மா மீண்டும் அந்தப் பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு 2000 தருமாறு கேட்டுள்ளார். போலீசார் அறிவுறுத்தலுக்கு ஏற்றவாறு மாதவரம் ரவுண்டானா அருகே அந்த பணத்தை வாங்கிக் கொள்ளும்படி அந்தப் பெண் கூறியுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணுடன் சென்ற போலீசார் மறைந்திருந்து ராகேஷ் ஷர்மாவை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராகேஷ் போலீசார் பிடியில் சிக்கியுள்ளார். அதன்பின் அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கைது செய்யப்பட்ட ராகேஷ் சர்மாவிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கத்தார் நாட்டில் ராகேஷ் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு இருக்கும் போது “நான் அவன் இல்லை” என்ற தமிழ் படத்தை முப்பது முறை பார்த்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். பின்னர் அதே சினிமா பட போன்று சமூக வலைதளங்கள் மூலம் இளம் பெண்களை பார்த்து குறி வைத்து ஆசை வார்த்தைகள் கூறி வலைவீசி வந்துள்ளார். அதில் சிக்கிய பெண்களை ஏமாற்றி பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துள்ளார்.
இதேபோல் சிங்கப்பூர், மலேசியா, திருச்சி, மற்றும் சென்னையில் வளசரவாக்கம், கோடம்பாக்கம், கொடுங்கையூர் உள்பட பல இடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. கைதான மோசடி மன்னன் ராகேஷ் ஷர்மாவிடம் இதுபோல் எத்தனை பெண்கள் ஏமாந்தனர்? என போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.