சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது ட்வீட் சர்ச்சைக்குள்ளானது குறித்து சித்தார்த் விளக்கமளித்துள்ளார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, நாக சைதன்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்ற பிரிவதாக அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமந்தா, நாக சைதன்யா பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அந்த சமயத்தில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலானது. அதில் ‘பள்ளியில் ஆசிரியரிடம் இருந்து நான் கற்ற முதல் பாடம், ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள். உங்கள் பாடம் என்ன?’ என பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பலரும் சித்தார்த் நடிகை சமந்தா குறித்து மறைமுகமாக பதிவு செய்துள்ளார் என தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன் சித்தார்த், சமந்தா இருவரும் காதலித்து பின் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் சித்தார்த் சர்வானந்த்துடன் இணைந்து மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இதனை விளம்பரப்படுத்த நடிகர் சித்தார்த் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது சர்ச்சைக்குள்ளான தனது டுவீட் குறித்து பேசிய சித்தார்த் ‘ஒவ்வொரு நாளும் என் மனதில் தோன்றும் விஷயங்களை நான் டுவிட்டரில் பதிவிடுகிறேன். என் வீட்டிற்கு வெளியே திரியும் நாய்கள் குரைப்பதை பற்றி நான் ட்வீட் செய்தால், அது அவர்களை பற்றியது தான் என மக்கள் நினைத்துக்கொள்கிறார்கள். நான் அதற்கு பொறுப்பாக முடியாது’ எனக் கூறியுள்ளார்.