கர்நாடகாவில் நடப்பு கல்வி ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான புதிய திட்டங்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் “தேசிய கல்வி கொள்கை 2020 ” நடப்பு 2021 – 2022 கல்வி ஆண்டிலேயே அமல் படுத்தப்படுவதாக அறிவித்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்துள்ளார்.
இது பற்றி பேசிய அமைச்சர், நாட்டில் முதல் மாநிலமாக தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியதற்காக கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, கல்வியமைச்சர் அஸ்வந்த் நாராயண் ஆகியோரை பாராட்டுகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவால் நாட்டில் பிற மாநிலங்களுக்கு கர்நாடக முன்மாதிரியாக விளங்குகிறது. அறிவு தளத்தில் கர்நாடகா மிக வேகமாக முன்னேறும் என்று உறுதியாக நம்புகிறேன். கர்நாடகாவின் கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து பிற மாநிலங்களும் விரைவில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.