டெல்லியில் விவசாயி ஒருவரின் தலையில் போலிசார் லத்தியால் அடிக்கும் பதற வைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் உடன் டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள்.இதனையடுத்து டெல்லியில் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டம் பரவியுள்ளது. கோலாகலமாக குடியரசு தினம் கொண்டாடப்படும் அதே வேளையில் டெல்லியில் விவசாயி ஒருவரின் தலையிலேயே போலிசார் லத்தியால் அடிக்கும் பதற வைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.