நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகள் வாழ்வோடு போராடி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட பரவல் மிக தீவிரமாக உள்ள நிலையில் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க தொழிற்கூடங்களுக்கு வினியோகப்படும் ஆக்சிஜன் தற்போது முற்றிலுமாக நிறுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் கோவையில் செயல்பட்டு வரும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் உருளைகள் முற்றிலுமாக மருத்துவமனைக்கு மட்டுமே அனுப்பி வருகின்றனர். இங்கு ஆக்சிஜனை உற்பத்தி 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் புதுச்சேரியிலிருந்து இரண்டு ஆக்சிஜன் லாரிகள் பாதுகாப்புடன் சென்னைக்கு வந்தன. லாரிகளை பெருங்களத்தூரில் போலீஸார் பாதுகாப்புடன் வரவேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றிற்கு அனுப்பிவைத்தனர்.
அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேவையான ஆக்சிஜனை ஏன் தயாரிக்க வில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடுமுழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சில இடங்களில் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. குஜராத் உள்ளிட்ட ஊர்களில் ஆக்சிஜனை பெற பொதுமக்கள் வரிசையில் காத்து கிடக்கின்றனர்.