நாடு முழுவதிலும் உள்ள ஏழைகளுக்கு இலவச திருமணங்கள் நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் உள்ள கோயில்களுக்கு பசு மற்றும் கன்றுகளை வழங்கும் கோமாதா திட்டத்தை அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழிகாட்டுதலின் படி நாடு முழுவதிலும் மத நிகழ்ச்சிகளை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கார்த்திகை மாதத்தில் கோவில்களுக்கு பசு வழங்கும் கோமாதா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேவஸ்தானம் சார்பாக கல்யாண மஸ்து திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் இலவசமாக திருமணங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்துவதற்காக 3 முகூர்த்த நாட்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. மே 28, அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் திருமணம் நடத்தப்பட இருக்கிறது. அதைப் பதிவு செய்யும் தம்பதிகளுக்கு தங்கத் தாலி, பட்டு வஸ்திரம், பூமாலை மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் மணமகன் வீட்டார் சார்பாக 10 பேரும், மணமகள் வீட்டார் சார்பாக 10 பேரும் திருமண விழாவில் கலந்து கொள்ளலாம். இதற்கு தேவஸ்தான இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.