Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாங்க ரொம்ப பின்தங்கி இருக்கோம்… 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வேணும்…. குறும்பர் இன மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தாலுகா அலுவலகத்தில் குறும்பர் இன மக்களுக்கு 5% உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழ்நாடு குறும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் மக்கள் சமூக நீதிப் பேரவையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் தமிழ்நாடு குறும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் மக்கள் சமூக நீதிப் பேரவையினர் திரண்டனர். அதன்பின் குறும்பர் இன மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தாலுகா அலுவலக நுழைவு வாயில் முன்பு கருப்புக் கொடியுடன் கோஷமிட்டனர். மேலும் பழனி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அனுமதி இல்லாமல் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என்றும் கூறினர். தாலுகா அலுவலகத்தில் மனுவை மட்டும் கொடுத்து விட்டு செல்லுமாறு கூறினார்.

இதையடுத்து தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி தாலுகா அலுவலகத்தில் செலுத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குரும்பர் இன மக்கள் தமிழகம் முழுவதும் உள்ள 24 மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ளோம். தமிழக அரசு தற்போது குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் 10% இட ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் காரணமாக எங்கள் சமூகம் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே எங்களுக்கு 5% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறினர். இதில் மக்கள் சமூக நீதிப் பேரவையின் பொருளாளர் சுமதி, மாநில பொது செயலாளர் கோவிந்தன், இளைஞரணி அமைப்பாளர் பூமிராஜன், மகேந்திரன் ராமசாமி, சுப்ரமணியன், மாவட்ட அமைப்பாளர் சாஸ்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |