போலீஸ் போல நடித்து நகை கடை உரிமையாளரை பைக்கில் கடத்திய ஏழுபேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை, முகப்பேர் ஜெ.ஜெ நகரில் வசித்து வருபவர் ராபின் ஆரோன்(35). இவர் முகப்பேர் பகுதியில் நகை கடை, அடகு கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் ராபின் ஆரோன் கடந்த 22-ஆம் தேதி திருப்பதியில் சொந்தமாக நகை கடை திறக்க சென்றார். அதன்பின் சென்னைக்கு திரும்பி காரில் வந்து கொண்டிருந்த போது புழல் சிறை அருகில் ஜி.என்.டி ரோட்டில் வந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த ஏழு பேர் சேர்ந்த கும்பல் ராபின் ஆரோனின் காரை வழிமறித்தது. இதனையடுத்து அவரை காரிலிருந்து கீழே இறங்கிய கும்பல் நாங்கள் கொருக்குப்பேட்டை போலீஸ் நிலைய தனிப்படை காவல்துறையினர், எங்களிடம் பிடிவாரண்டு உள்ளது என்று தெரிவித்து தாங்கள் வந்திருந்த பைக்கில் அவரை கட்டாயப்படுத்தி ஏற்றி சென்றனர்.
அதன்பின் புழல் சைக்கிள் ஷாப் அருகில் அவரை கூட்டிச்சென்று பேசிக்கொண்டிருந்தபோது அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஆனந்தகுமார் என்பவருக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் விசாரித்தபோது போக்குவரத்து போலீசாரை பார்த்ததும் 7 பேர் சேர்ந்த கும்பல் ராபின் ஆரோனை அங்கேயே விட்டு விட்டு தப்பித்து சென்று விட்டார்கள்.
இதனையடுத்து மர்ம நபர்கள் போலீஸ் போல நடித்து கடத்தியது ராபின் ஆரோனுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராபின் ஆரோன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து கடத்திய கும்பல் யார்? எதற்காக நகை கடை உரிமையாளரை கடத்தி உள்ளார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கடத்திய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.