சீனா, இலங்கையில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது ஆதரவை தெரிவித்தார். இதன் காரணமாக சீன அரசு அவருடன் நெருக்கமானது. இதனால் தான் மகிந்த ராஜபக்சே அண்மையில் பதவி விலகிய போது சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோல் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதையும் சீனா கவனமாக அணுகி வருகிறது.
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் ரணில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, “இலங்கையின் சமீபத்திய நிகழ்வுகளை பாரம்பரிய நட்பு நாடு என்ற முறையில் நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும் தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீனா ஆதரவு அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இலங்கையில் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க உதவி செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.