அல்லு அர்ஜூனின் புஷ்பா மற்றும் பாகல் வெப்சீரிஸை பார்த்து அதேபோன்று பிரபலமடைவதற்காக இளைஞர் ஒருவரை, 3 சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்,ஜஹாங்கீர்புரி என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் தேதி வெளியான அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படம், வட இந்தியாவில் பெரும் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. மேலும் அதில் வரும் அல்லு அர்ஜூனின் டயலாக்குகள் பிரபலமடைந்தது. இந்நிலையில் அப்படத்தைப் பார்த்து உத்வேகம் அடைந்த சிறுவர்கள் 3 பேர், ஜஹாங்கீர்புரி பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த 24 வயது இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து சிறுவர்கள், அந்த இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். மேலும் இச்சம்பவத்தை அந்த சிறுவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய நினைத்துள்ளனர். இதன் மூலமாக சிறுவர்கள் பிரபலம் அடையலாம் என்றும் எண்ணியுள்ளனர். இதனிடையில் சிறுவர்களால் கத்தியால் குத்தப்பட்டு வயிற்றில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர், அங்குள்ள பாபு ஜகஜீவன் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.
அதன்பின் இளைஞர் உயிரிழந்தது குறித்து மருத்துவமனையில் அளித்த தகவலின்படி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவர்கள் இளைஞருடன் வாக்குவாதம் நடத்தி கொலை செய்தது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுவர்களைப் பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், புஷ்பா படம் போன்று பிரபலமடைவதற்காக இவ்வாறு செய்துள்ளது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல் அல்லு அர்ஜூன் அந்தப் படத்தில் பேசும் “நான் யாருக்கும் அடங்காதவன் டா” என்ற அந்த டயலாக்கையும் இமிடேட் செய்து பேசியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் டி.சி.பி. உஷா ரங்கானி தலைமையிலான காவல்துறையினர் சிறுவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வீடியோ எடுத்த செல்போன் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.