புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த புதுவை முதல்வர் நாராயணசாமி, தொடர்ந்து நானும், மதசார்பற்ற மதசார்பற்ற கூட்டணி தலைவர்கள் பலகட்ட போராட்டங்களை கிரண்பேடி அம்மையார் அவர்களுக்கு எதிராக நடத்தினோம்.
புதுச்சேரி மாநிலத்தில் அராஜகமாக நடந்து கொள்கிறார், விதிமுறைகளுக்கு மீறி செயல்படுகிறார், புதுச்சேரி மாநில மக்களுடைய உணர்வுகளை மதிக்காமல் செயல்படுகிறார், சட்டமன்ற உறுப்பினர்களை மதிப்பதில்லை, அமைச்சரவையை மதிப்பதில்லை, தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்று தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்தி வந்தோம்.
கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை வைத்தோம். நாங்கள் தர்ணா போராட்டம் நடத்தினோம், கையெழுத்து இயக்கம் நடத்தினோம், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். இவ்வளவும் செய்த பிறகு இப்போது மத்திய அரசு விழித்துக் கொண்டிருக்கிறது. கிரண்பேடி அம்மையார் அவர்களை புதுச்சேரியில் இருந்து தூக்கி எறிந்து இருக்கிறார்கள்.
கிரண்பேடி புதுச்சேரி மாநில மக்களை வஞ்சித்து விட்டார், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றார் என்று பல சொல் பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் உடைய தலைமை அலுவலகமாக ராஜ்பவன் இருந்து வந்தது. இப்போது புதுச்சேரி மாநில மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். மதசார்பற்ற கூட்டணி சார்பில் நாங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக கிரண்பேடி தூக்கி எறியப்பட்டு இருக்கிறார் என நாரணயசாமி தெரிவித்தார்.