செல்போன் டவரில் இருந்து அலைக்கற்றைகளை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டருக்கு பின்புறம் இருக்கும் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக 2 நபர்கள் இருப்பதாக உளவுத்துறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி உளவுத்துறை காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL டவரில் இருந்து அலைக்கற்றைகளை திருடியது தெரிய வந்தது. இது குறித்து BSNL அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே BSNL அலுவலகத்தின் அதிகாரி தேனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் அலைக்கற்றைகளை திருடுவதற்காக பயன்படுத்திய நவீன கருவிகள் மற்றும் ஏராளமான சிம் கார்டுகள் போன்றவைகள் இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் அலைக்கற்றைகளை திருடிய நபர்களை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த தேடுதல் வேட்டையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஆஷிப் மற்றும் சஜீர் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆண்டிபட்டி மற்றும் பாப்பம்மாள்பட்டி பகுதியில் உள்ள வீடுகளிலும் நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி அலைக்கற்றைகளை திருடியது தெரிய வந்தது. அதன்பிறகு காவல்துறையினர் குற்றவாளிகள் கூறிய இடத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் 31 நவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் ஏராளமான சிம் காடுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அலைக்கற்றைகளை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு குறைந்த செலவில் பேசிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் அலைக்கற்றைகளில் 30 சிம் கார்டுகளை பொருத்திக் கொள்ள முடியும்.
இந்த அலைக்கற்றைகளை பயன்படுத்தி ஒருவர் பேசினால் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் இருப்பது போன்று காட்டும். இதன் காரணமாக அலைக்கற்றைகளை பயன்படுத்தி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் 2 பேர் தவிர வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் குற்றாவளிகள் 2 பேரும் 10-ம் வகுப்பு தான் படித்துள்ளனர்.