இந்தியா முழுவதும் நவராத்திரி பண்டிகை வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப் படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் நவராத்திரி பண்டிகை இன்று தொடங்கியுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகையின் போது துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவார்கள். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது முப்பெரும் தேவிகளை வழிபடுவதன் அவசியம் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம். அதன்படி நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களும் உமா தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. இதில் துர்கா தேவி முதல் 3 நாட்களுக்கு மிகவும் உக்கிரமாக காளி வடிவத்திலும், அடுத்த 3 நாட்களுக்கு செல்வ வளத்தை கொடுக்கும் லட்சுமி தேவியாகவும், கடைசி 3 நாட்களுக்கு ஞானத்தை அருளும் சரஸ்வதி தேவியாகவும் அம்மன் காட்சி புரிவாள்.
1. துர்கா தேவி
துர்க்கம் என்றால் அரண் என்று பொருள். இதில் அரண் என்பது கோட்டை மதில் சுவரை குறிக்கும். கோட்டையை காப்பதற்காக மதில் சுவரில் வைக்கப்படும் தெய்வம் தான் துர்கா என்று கருதப் படுகிறது. இதன் காரணமாகத்தான் துர்கா தேவி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த துர்கா தேவியை வழிபடுவதன் மூலம் சோம்பலை வென்று வலிமை மற்றும் மன தைரியத்தை பெறலாம்.
2. லட்சுமி தேவி
லட்சுமி தேவியானது சூரியனுக்கு நிகரான தெய்வமாக கருதப்படுகிறது. லட்சுமி தேவியை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வேண்டிய செல்வமும் வளமும் கிடைக்கும்.
3. சரஸ்வதி தேவி
சரஸ்வதி தேவி சந்திரனுக்கு ஒப்பான தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. சரஸ்வதி தேவியை வழிபடுவதன் மூலம் ஞானம் கிடைக்கும்.
நவராத்திரி பண்டிகையின் போது பின்பற்ற வேண்டிய விரத முறைகள்:
பொதுவாக விரதம் இருப்பவர்கள் பால், பழம் போன்றவற்றை மட்டும் தான் உண்ண வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் நாள் முழுவதும் பால் மற்றும் பழம் ஆகியவற்றை உண்டு விரதம் இருப்பது தான் சரியான முறை. அதன் பிறகு தாமரை விதையிலிருந்து பெறப்படும் உணவுகள், பால், பாலாடை கட்டி, தயிர் போன்ற பால் பொருட்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இதனையடுத்து சமையலுக்கு விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய், நெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். அதோடு சமையலுக்கு கல் உப்பை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் விரதம் இருப்பவர்கள் மாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், பருப்பு, வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.