மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் வீட்டிற்குள் நுழைந்து கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் 12-வது வார்டு வாக்குச்சாவடியில் வெளியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ஒய்.எப்.ஐ மார்த்தாண்டம் வட்ட செயலாளர் ஜினு ஜெரால்டு வீட்டிற்குள் நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் ஓன்று நுழைந்தது. அதன் பின் மர்ம நபர்கள் வீடு மற்றும் கார் கண்ணாடியை அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஜினு ஜெரால்டின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சுரேஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.