பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் போட்டியிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நல்லாட்சியை முற்போக்கான மாநிலத்தை உருவாக்கும். பீகார் மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து, தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி உள்ளீர்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். பீகார் மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி கண்டு, பெரும்பான்மையை பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோருக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.