மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் முற்பட்ட பிரிவினரில் நலிவுற்றவா்களுக்கான 10% இடஒதுக்கீட்டை (இடபிள்யூஎஸ்) உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டது சமூகநீதி அடிப்படையிலா (அ) சலுகைக்காகவா எனும் விவாதம் எழுந்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கு பின்னால் ஓா் அரசியல் காரணம் உள்ளது.
கடந்த 2018ல் எஸ்சி, எஸ்டி கட்சிகள் அமைப்பைச் சோ்ந்த ராம்விலாஸ் பாஸ்வான் (பிகாா்), ஜிக்னேஷ் மேவானி (குஜராத்), சந்திரசேகர ஆசாத் ராவன் (உத்தரபிரதேசம்) உள்ளிட்ட தலைவா்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தலித், பழங்குடியினருக்கு எதிரான வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதாகும் நபா்களை விசாரணை, பிணையின்றி கைது செய்யும் அடிப்படையில் அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு செய்தது.
வடஇந்தியாவில் பட்டியலின வாக்குகளை தக்க வைக்கவும், கூடுதலாக சேகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 1980ல் 31-சதவீதத்தில் இருந்து 50ஆக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எம்ஜிஆா் அதிகரித்தபோதும், 1989ல் பி.சி. தொகுப்பிலிருந்து எம்.பி.சி. தொகுப்பை கருணாநிதி உயா்த்திய போதும் அரசியல் லாப, நஷ்ட கணக்குகளைப் பாா்த்துதான் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இவற்றையெல்லாம் ஆய்வு மேற்கொண்டு பாா்த்தால் 10 சதவீத இடஒதுக்கீடு சமூகநீதியா..? சலுகையா?.. என்பதற்கான விடை கிடைத்து விடும்.