ராணுவ வீரர்கள் சுயநலம் பார்க்காமல் மக்களை பாதுகாப்பதற்காக குளிர், மழை, வெயில், குடும்பத்தைப் பிரிந்து தனிமையான சூழல் என பல சிரமங்கள் மத்தியில் சிரிப்புடன் போர்முனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தான் நம் நாட்டின் உண்மையான ஹீரோக்கள். அவர்கள் தங்களின் உயிரை கூட பொருட்படுத்தாமல் நமக்காக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களுடைய கலப்பை போக்குவதற்காக பாரம்பரிய நடனமான குக்ரி நடனத்தை ஆடினர்.
இந்திய எல்லையில் நாட்டை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்கள் கடுமையான பனி பொழிவையும் பொருட்படுத்தாமல் நாட்டிற்காக அயராது உழைத்து வருகின்றனர். இமயமலையில் நிலவும் குளிரை சமாளிக்க உடல்வலிமை மட்டுமல்லாமல் மனவலிமையும் தேவைப்படுகிறது. இந்நிலையில் உடற்பயிற்சி நடனம் ஆகியவை ராணுவ வீரர்களின் உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
அதன்படி வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் ரத்தத்தை உறையவைக்கும் குளிர் நிலையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்கள் தங்கள் களைப்பைப் போக்கும் வகையில் பாரம்பரிய நடனமான குக்ரி நடனத்தை ஆடினர். இந்த நடனம் வீரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மக்களின் ஆயுதமான சிறிய வகை கத்தியை கைகளில் ஏந்தியபடி ராணுவ வீரர்கள் ஆடியுள்ளனர்.