மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 4 1/4 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 4 பேர் மனு அளித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் சர்வமாணியம் கிராமத்தில் முரளி(32) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முரளி, ராஜ்குமார்(40), லட்சுமணன்(49), ரமேஷ்(40) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எங்கள் நான்கு பேரையும் மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறினார். அதற்காக அந்தப் பெண் பணம் கேட்டார்.
அதன்படி முரளி ரூ.1,50,000, ராஜ்குமார் ரூ.1,00,000, லட்சுமணன் ரூ. 80,000, ரமேஷ் ரூ. 90,000 என மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்தோம். அவர் ராஜ்குமார் மற்றும் முரளிக்கு மலேசியாவிற்கு சொல்வதற்கான டிக்கெட் மற்றும் விசாவை வழங்கினார். அதனை பயன்படுத்தி இருவரும் மலேசியாவிற்கு சென்றுள்ளனர். அங்கு விசாவை சோதனை செய்த அதிகாரிகள் அது போலியானது என கூறி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து விடுதலை செய்த பிறகு இருவரும் ஊருக்கு திரும்பி வந்தனர். இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. மேலும் ரமேஷ் மற்றும் லட்சுமணனை மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்பி வைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் அந்த பெண் செய்யவில்லை. எனவே பண மோசடியில் ஈடுபட்ட அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.