தண்ணீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள செவுடிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 7 வாலிபர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் இருக்கும் மாஹிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து விட்டு வாலிபர்கள் தர்மடம் அழிமுகம் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அகில்(24), சுனில்(25) ஆகிய இரண்டு பேர் ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அகிலின் உடலை மீட்டனர். இதனை அடுத்து நீச்சல் பயிற்சி பெற்ற மீனவர்கள் மூலம் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுனிலின் உடல் மீட்கப்பட்டது. இரண்டு வாலிபர்களின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.