நண்பராக பழகிய வாலிபரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை துப்பாக்கி முனையில் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டாம்பட்டி கிராமத்தில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் சென்னையை சேர்ந்த ஹரி என்பவரும் பேஸ்புக் மூலம் பழகி நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் ஹரியின் ஆலோசனைப்படி 20 ஆயிரம் ரூபாய்க்கு மோட்டார்சைக்கிளை வாங்க சுரேஷ்குமார் முடிவெடுத்தார். இதனால் தனது நண்பரான சங்கர் என்பவருடன் மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக சுரேஷ்குமார் கவரைபேட்டை பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது ஹரி சுரேஷ்குமார் மற்றும் சங்கர் ஆகிய இருவரையும் தைலமரத்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகு தனது நண்பர்களுடன் இணைந்து கத்தி மற்றும் கையால் தாக்கி துப்பாக்கி முனையில் சுரேஷ்குமாரிடம் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து சுரேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஹரி உள்பட 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.