வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் இருவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை தோண்டி எடுத்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரியவந்துள்ளது.
இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரேம்குமார் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி அந்த ஆடியோவை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். இதனையடுத்து ஆபாசமாக பேசிய ஆடியோ மற்றும் மாணவிகளின் புகைப்படத்தை பெற்றோருக்கு அனுப்பி விடுவதாகவும் , சமூக வளைதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டி பிரேம்குமார் அந்த மாணவிகளிடம் இருந்து பணத்தை பறித்து வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவிகள் தங்களது இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். அந்த நபர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பிரேம்குமாரை கொன்று புதைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் நாகராஜகண்டிகை கிராமத்தில் வசிக்கும் அசோக் மற்றும் லிவின் ஆகிய இருவர் சரணடைந்தனர். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.