லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில்லாராஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கோவிலில் இருந்து அம்மன் சிலையை சரக்கு வேனில் எடுத்துக்கொண்டு கடத்தூர்-பொம்மிடி சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இப்போது அவ்வழியாக வந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாமி ஊர்வலத்திற்குள் புகுந்து வேனின் மீது மோதியுள்ளது. இதில் செந்தில்குமார், சுப்பிரமணி, வள்ளியம்மாள், சீனிவாசன், பவன், கோவிந்தம்மாள் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி, கோவிந்தம்மாள் ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.