சாலையின் இருபுறங்களும் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சென்னை மற்றும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. ஆனால் இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் தாம்பரம் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும் இந்த நெரிசலால் விபத்துகளும் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் இந்த சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டனர். அதேபோல் ஸ்ரீ பெரும்புதுரிலிருந்து பிள்ளையாப்பாக்கம் வரை 3.5 கிலோமீட்டர் தூரம் நான்கு வழி சாலையாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது பிள்ளைப்பாக்கம் முதல் மணிமங்கலம் வரை 8.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு 20 மீட்டர் அகலத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று வருவாய்த்துறையினர் காவல்துறையின் உதவியோடு சாலையின் இருபுறமும் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.