நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடையூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சிவராஜ்(28) என்பவர் கோவிந்தனுக்கு சொந்தமான காரை பழுது பார்ப்பதற்காக திருக்கோவிலூரில் இருக்கும் தனியார் பணிமனைக்கு ஓட்டி சென்றுள்ளார். அங்கு பழுதை சரி செய்த பிறகு சிவராஜ் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அவருடன் பிரபு என்பவர் உடனிருந்தார். இந்நிலையில் திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் எஞ்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவராஜ் மற்றும் பிரபு ஆகிய இருவரும் உடனடியாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.