மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி .ருக்குமணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிப்பதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சொத்தாட்சியர் இடைக்கால நிர்வாகியை நியமித்து ஆணையிட்டார். அதன்படி, அவருக்கு சொந்தமான தியாகராயநகர் பத்மநாபன் தெருவில் ஒரு கட்டிடத்தை பராமரிப்பது, வாடகை வசூலிப்பது, அத்து மீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிர்வாகி கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த சொத்தை ஆய்வு செய்ய இடைக்கால நிர்வாகி சென்றபோது அந்த கட்டிடத்தை 10 பேர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதும், கட்டிடத்தை அபகரிக்கும் நோக்குடன் நடிகர் மன்சூர் அலிகான் செயல்படுவதும் கண்டறியப்பட்டது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிர்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது என்பதால் தற்போது மன்சூர் அலிகானுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.