தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவரது சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி. இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் வசித்து வருகிறார். ஜெய கர்நாடக அமைப்பின் தலைவராக இருந்து மரணமடைந்துள்ள முத்தப்பா ராயின் நெருங்கிய ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் குணரஞ்சன் ஷெட்டியை கொலை செய்ய சதி திட்டம் நடப்பதாக கூறி, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு ஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் குணரஞ்சன் ஷெட்டியும் தன்னைக் கொலை செய்ய சதி திட்டம் நடப்பதாகவும், கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து முத்தப்பா ராயின் மற்றொரு நெருங்கிய ஆதரவாளரான மன்னுத் ராய்க்கும் குணரஞ்சனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மன்னுத் ராய் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மன்னுத் ராய் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. போலீஸ் விசாரணை நடத்தினால் உண்மை வெளியே வரும் என்றும் மன்னுத் ராய் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.